தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்க வழக்கறிஞர்கள் குழு அமைத்து செயல்பட வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தம் வரவேற்றார்.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில், பல்வேறு கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, அனைத்து மாவட்டத்திலும் வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் திறக்க வேண்டும்.
தேர்தல் பயம் காரணமாக அதிமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 2500-ஐ வழங்கியுள்ளது. தேர்தல் முறைகேடுகளை கண்டுபிடிக்க வழக்கறிஞர் குழு அமைத்து செயல்பட வேண்டும். வரும் தேர்தலில் திமுக பெரும்பாலான இடத்தில் வெற்றிபெறும். தேர்தல் பரப்புரையில் திமுகவின் செல்வாக்கை பார்த்து, பாஜக தமிழகத்தில் தனிகவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். இதில், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago