கோபியில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட் பட்ட சிறுவலூர், அயலூர், கலிங்கியம், அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், குருமந்தூர் ஆகிய 6 ஊராட்சி பகுதிகளில் ரூ.61.30 கோடி மதிப்பிலான புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது:

கோபி தொகுதியில் உள்ள 6 ஊராட்சி பகுதிகளில் ரூ.61.30 கோடி மதிப்பீட்டில், புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாள்தோறும் 23 லட்சத்து 13 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதியதாக 8 தரைமட்ட தொட்டிகள், 39 மேல்நிலை தொட்டிகள் என மொத்தம் 128 மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். அங்கிருந்து 11 ஆயிரத்து 92 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும். கோபியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்து 721 பேர் பங்கேற்றனர். இவர்களில் 5 ஆயிரத்து 283 பேர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கு தகுதி பெற்றுள்ளனர், என்றார். நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக செயற்பொறியாளர் பொன்னுசாமி, கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோட்டில் ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் இளங்கோவன் தலைமையில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் குறித்து எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு கூறும்போது, ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தற்போது ரூ.30 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலம் தற்போது வரை 28 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் இறுதிக்குள் 1.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்