அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
கடலூர் மஞ்சகுப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பாக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் மத்திய மாவட்ட செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழகத்தில் 2011-க்கு பிறகு மின்வெட்டு பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் அதிமுக அரசு சாதனை புரிந்துள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் மின்வெட்டு ஏற்படும்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து உள்ளனர். இந்தியாவிலே மின்வெட்டு இல்லாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.திமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே மின்விநியோகம் செய்தனர். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கி உள்ளோம். பெண்களுக்கு முன்னுரிமை அளித்த ஒரே அரசு அதிமுக அரசு. தாலிக்கு தங்கம், மகப்பேறு காலத்தில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமி, பொங்கல்தொகுப்பாக ரூ.2,500 ரொக்கத்துடன் பச்சரிசி , சர்க்கரை , கரும்புவழங்கியுள்ளார்.கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனைதள்ளுபடி செய்துள்ளார். மற்றவர்கள் தேர்தல் வாக்குறுதியாக தான் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வேன் என்று கூறுவார்கள் ஆனால் முதல்வர் தேர்தலுக்கு முன்பே தள்ளுபடி செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். விவசாயக் கடனை தள்ளுபடி செய்த முதல்வருக்கு கடலூர் மாவட்ட விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அதிகப்படியான வாக்குகள் பெற்று மூன்றாவது முறை அதிமுக ஆட்சி அமைக்கும்.
இதற்கு அதிமுக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கடலூர் நகர செயலாளர் குமரன் , எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் கார்த்திகேயன் , கடலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் தெய்வபக்கிரி , கோவை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஏ.ஜி.தஷ்ணா, சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago