பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தவர்கள் அதிமுகவினர்தான் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தவர்கள் அதிமுகவினர்தான் என்று, திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தை சேர்ந்த 38 மக்களவை உறுப்பினர்களும் எதுவும் செய்யவில்லை, ஒரு மக்களவை உறுப்பினரை வைத்து 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்துள்ளதாக முதல்வர் பிரச்சாரம் செய்வது வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, இதுவரை எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள்தான் மருத்துவக் கல்லூரிகளை முன்னெடுப்பு செய்து கொண்டுவர முடியும். தமிழக மக்களுக்காக திமுக மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை அதிமுகவினர் ஆதரிக்கின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே பேசி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அவற்றை நிறைவேற்றும் நோக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்று வருகிறார். 10 ஆண்டுகளில் மக்கள் கோரிக்கைகளை அதிமுகவினர் நிறைவேற்றியிருந்தால், இந்த தேவை இருந்திருக்காது. இந்த ஆட்சியில் நடைபெறும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களும், திமுக தலைவர் அறிக்கை வெளியிட்ட பிறகே மேற்கொள்ளப்படுகின்றன.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில், அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியது அதிமுக. இதை அவர்களால் மறுக்க முடியாது. மேலும், அவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தவர்களும் அதிமுகவினர்தான். இதையெல்லாம் மறைப்பதற்காகவே திமுக மீது குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்