தேசிய அளவிலான நாய் கண்காட்சிக்கு பிரபலமாகும் மதுரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான நாய்கள் பங்கேற்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு, வெளிநாட்டு நாய்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அதனால், ஜல்லிக்கட்டைப்போல் மதுரையை மையமாகக் கொண்டு நாய்கள் கண்காட்சியும் பிரபலமடைந்துள்ளது.

நாய் வளர்ப்புக்கும், அதன் விற்பனைக் கண்காட்சிக்கும் மதுரை மையமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடக்கும் நாய்கள் கண்காட்சிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாய்கள் பங்கேற்கின்றன.

சிப்பிப்பாறை, ராஜபாளையம், மந்தை கோம்பை, கட்டை போன்ற நாட்டின நாய்கள் முதல் கிரேட்டன், டாபர் மேன், செயின்ட் பெர்னாட், ஜெர்மென் ஷெப்பர்டு, லேப்ரடார் போன்ற வெளிநாட்டு நாய்கள் வரை பங்கேற்கும்.

இது குறித்து விளாங்குடியைச் சேர்ந்த கண்காட்சி நாய் உரிமை யாளர் கே.மணிசங்கர் கூறியதாவது:

வெளிநாட்டு, நாட்டின நாய்களின் விலை உயர்வுக்கு கண்காட்சியே முக்கியக் காரணம். நாய்கள் கண்காட்சியில் பங்கேற்று வெற்றிபெறும் நாய்களுக்கும், அதன் பெற்றோர் மூலம் பிறக்கும் குட்டிகளுடைய விலையும் பல மடங்கு உயரும். அதற்காகவே நாய் வளர்ப்பார்கள். தங்கள் நாய்களைப் பழக்கப்படுத்தி நாய்கள் கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதைப் பொழுதுபோக்காகவும், ஒரு தொழிலாகவும் கொண்டுள்ளதால் நாய்கள் கண்காட்சிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால், மதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழகத்தில் நடக்கும் நாய்கள் கண்காட்சியில் நாய்களை பங்கேற்க வைப்பது எளிதான காரியமில்லை.

கண்காட்சி நாய் உரிமையாளர் கே.மணிசங்கர் ராட்வீலர் தேசிய அளவில் கேனல் கிளப் ஆப் இண்டியா சார்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சிகள் நாய்களுக்கு மிக கடினமாகவும், சவாலாகவும் இருக்கும்.

கண்காட்சியில் பங்கேற்க நாய் எந்த ஊரில் பிறந்தது, அதன் பெற்றோர் உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய சான்றை வழங்க வேண்டும். மேலும், இந்த விவரங்கள் அடங்கிய ‘மைக்ரோ சிப்’ நாய் கழுத்தில் அல்லது காலில் பொருத்த வேண்டும். கண்காட்சியில் பங்கேற்க வரும் அந்த நாய்களை ஸ்கேன் செய்யும்போது மைக்ரோ சிப் விவரங்களும், சான்றிதழில் உள்ள விவரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.

நாயின் முன் கால், காது, வாய் உள்ளிட்டவை குரைக்கும்போது இந்தநிலையில்தான் இருக்க வேண்டும் என்ற விதிகள் கண்காட்சியில் பின்பற்றப்படும். அதில் எது ஒத்துப்போகிறதோ, அந்த நாய்க்கு ‘சிறந்த நாய்’ பட்டமும், மெடலும் கொடுப்பார்கள். அதன்பிறகு இந்த நாய்க்கும், இதன் மூலம் பிறக்கும் குட்டிகளுக்கும் மவுசு கூடும்.

இந்த அடிப்படையிலே நாய் கண்காட்சியில் வெற்றிபெறும் பெற்றோரின் லேப்ரடார், ராட்வீலர், கிரேடன், ஜெர்மன் செப்பர்டு, டாபர்மேன் உள்ளிட்ட நாய் குட்டிகள் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரூ.5 லட்சம் வரை விற்கப்படுகிறது. மற்ற நாய் குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அதுபோலவே நாட்டின நாய் குட்டிகள் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்