கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.
இதில், வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், மின் இணைப்பு, காவல் துறை பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர் மற்றும் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 292 பொது நலமனுக்களை பொதுமக்கள் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் வழங்கினர்.
செல்போன் டவரால் பிரச்சினை
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் மற்றும் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கவுள்ளன.குடியிருப்புப் பகுதிக்கு நடுவில் செல்போன் டவர் அமைப்பதால் பல்வேறு பிரச்சினைகள் எழும் என்பதால், டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்தோம், ஆனால் செல்போன் நிறுவனத்தினர் எதையும் பொருட்படுத்தாமல் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’’என தெரிவித்துள்ளனர்.
குடிநீர் பற்றாக்குறை
அதேபோல, திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர் புறங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டே அறிவித்தனர்.ஆனால், அதற்கான பணிகளை இன்னும் தொடங்கவில்லை. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
எனவே, கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, துணை ஆட்சியர் விஜயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பிச்சாண்டி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago