முன்விரோதம் காரணமாக இந்து முன்னணி நிர்வாகியை 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "திண்டுக்கல் மாவட்டம் பழநி பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (29). மனைவி, குழந்தைகளுடன் திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் தங்கி, பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
மேலும், இந்து முன்னணி அமைப்பில் திருப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியில் செயல்படும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் தங்கி, தென்காசியை சேர்ந்த உதயகுமார் (27) வேலை செய்து வந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன் அப்பகுதியில் உதயகுமார் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. தட்டிக் கேட்ட பிரபாகரனை உதயகுமார் தாக்கியுள்ளார். இதுகுறித்து பிரபாகரன் தகவல் தெரிவிக்கவே, உதயகுமாரை பணியில் இருந்து நிறுவனத்தினர் நிறுத்தியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த உதயகுமார், நேற்று முன்தினம் நள்ளிரவு சந்திராபுரம் அம்மா உணவகம் வழியாக பிரபாகரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே காத்திருந்த 3 பேர் கும்பலுடன் பிரபாகரனைவழிமறித்து அரிவாளால் தலை,கைகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
பலத்த காயமடைந்த பிரபாகரனை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த திருப்பூர் ஊரக காவல் நிலைய போலீஸார், நேற்று உதயகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago