திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் சுணக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதிய துணை வாக்குச்சாவடி பட்டியல் அமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பேசியதாவது:

திருப்பூர் தெற்கு தொகுதியில் இதுவரை துணை வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கூட்டமும் நடத்தப்படவில்லை, அரசியல் கட்சிகளுக்கு தகவலும் தெரிவிக்கப் படவில்லை.

இதேபோல, வேறு வளாகத்துக்கு மாற்றப்பட்ட வாக்குச்சாவடிகள் தொடர்பாகவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அரசியல் கட்சிகளுக்கு விவரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மாவட்டம் முழுவதும் 145 வாக்குச்சாவடிகள் எங்குள்ளன என்பது குறித்து இதுவரை தெரியப்படுத்தவில்லை.

அவசரகதியில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

மேலும், 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது, எந்த வாக்காளர் பட்டியலைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இன்று (பிப்.5) மாலைக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்க கூறி இருக்கிறார்கள். ஆனால், அதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை.

இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது. ஏற்கெனவே பணிபுரிந்த பழைய ஆட்சியர்களின் பெயர்கள்கூட தற்போதுதான் நீக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இரட்டைப் பதிவு முறையை நீக்கம் செய்ய வேண்டும். புதிய தபால் வாக்குகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதை அதிகாரிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தபால் வாக்குகள் தொடர்பாக தெளிவான நடைமுறையை அளிக்க வேண்டும். கரோனா தொற்றாளர்கள், மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட 5 பிரிவுகள் தனியாக ஒதுக்கப்பட வேண்டும். இந்த கூட்டம் கூட அவசர கதியில் கூட்டப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்துவதில் உரிய காலம் ஒதுக்கித் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

3486 வாக்குச்சாவடிகள்

திருப்பூர் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2493 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, புதிதாக 993 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 3486 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதே வளாகத்தில் 848 வாக்குச்சாவடிகள், வேறு வளாகத்துக்கு தேர்வு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 145 என 993 வாக்குச்சாவடிகள் உள்ளன" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்