தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) இணைந்து நாமக்கல்லில் வேளாண் திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தின. வேளாண் திருவிழா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் சிறுதானிய பயிர்கள், இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன. மேலும், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களின் மண் மாதிரிகள், நீர் மாதிரிகளிலிருந்து மண்ணின் கார, அமிலத்தன்மை மற்றும் உப்பின் அளவும் பரிசோதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் 255 விவசாயிகள் தங்களது பெயரை பதிவு செய்து கலந்துகொண்டனர். அவர்களுக்கு அங்கக வேளாண்மை குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பின்னர், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு அதிக மகசூல் எட்டிய நான்கு விவசாயிகளுக்கு, ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
அங்கக வேளாண்மை தொழில்நுட்ப கருத்தரங்கில், அங்கக வேளாண்மை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து உதவி பேராசிரியர் சுகன்யா கண்ணன், விவசாயிகளின் அனுபவம் குறித்து எடப்பாடியை சேர்ந்த இயற்கை விவசாயி வி.எஸ்.ராஜன், கால்நடை மற்றும் கோழி இனங்களுக்கான மரபுசார் மூலிகை மருத்துவம் குறித்து உதவி பேராசிரியர் ப.மேகலா ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ந.அகிலா, வேளாண்மை இணை இயக்குநர் பொ.அசோகன், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஏ.ஜெ.கென்னடி ஜெயக்குமார், துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை கணேசன், வேளாண்மை அறிவியல் நிலையம் உதவி பேராசிரியர் பெ.முருகன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago