ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகள் தொடக்கம் பள்ளிகளைத் தயார் செய்யும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்படுவதை யொட்டி, ஈரோடு மாவட்டத்தில் 403 பள்ளிகளைத் தயார்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

கரோனா ஊரடங்கு தளர்வையடுத்து, வரும் 8-ம் தேதி முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வகுப்பு நுழைவாயிலில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் என்பதுள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 403 பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் 28 ஆயிரத்து 393 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 வகுப்பில் 24 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகள் என மொத்தம் 53 ஆயிரத்து 266 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி திறப்பையொட்டி, வகுப்புகளை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

வகுப்புகளில் உள்ள பழுதடைந்துள்ள இருக்கைகள், போர்டுகள் சரிசெய்யப் பட்டு, கிருமிநாசினி தெளிக்கப் பட்டு வருகிறது. மொத்த மாணவர்களை எத்தனை வகுப்புகளாக பிரிக்கலாம் எனக் கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப ஆசிரியர்களை பணியில் அமர்த்தவும் பள்ளி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்