3-வது நாளாக சாலை மறியல் போராட்டம் அரசு ஊழியர் சங்கத்தினர் 860 பேர் கைது

By செய்திப்பிரிவு

10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, மத்திய மண்டலத்தில் 3-வது நாளாக நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 860 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2-ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். vதமிழ்நாடு அரசு புள்ளியில் சார்நிலை அலுவலர் சங்க மாநில பிரச்சாரச் செயலாளர் கா.பால்பாண்டி தலைமை வகித் தார்.

போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன், மாவட்டத் தலைவர் என்.பி.விவே கானந்தன், மாவட்டச் செயலாளர் பி.பழனிச்சாமி உட்பட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 3-வது நாளாக நேற்று நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜபருல்லா உட்பட 59 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரூரில்...

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சாலை மறியல் செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிஐடியு சங்கத்தினர் பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

அரியலூரில்..

அரியலூர் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 84 பெண்கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் பஞ்சாபிகேசன், சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செய லாளர் சிவக்குமார், ஊரக வளர்ச்சித் துறை மாவட்டச் செயலாளர் பழனிவேல், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கீதா ஆகியோர் தலைமை வகித்தனர்.

பெரம்பலூரில்..

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 13 பெண்கள் உட்பட 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில்...

தஞ்சாவூர் ரயிலடி அருகே நேற்று சாலை மறியல் போராட் டத்தையொட்டி நடைபெற்ற பேரணியை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர்கள் சங்க மாநிலச் செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி, மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட பொருளாளர் கே.பாஸ் கரன் உட்பட சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்தில்...

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 60 பெண்கள் உட்பட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இளவரசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உட்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூரில்...

அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வெ.சோமசுந்தரம் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உட்பட 99 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்