நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆட்சியர்களுக்கு கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி உட்பட மாவட்ட ஆட்சியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் ஆகியோர் கரோனா தடுப்பூசியை நேற்று போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்டபின் செய்தி யாளர்களிடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்கள அரசுப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று (நேற்று) தொடங்கி யுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 418 மருத்துவர்கள் உட்பட 2,829 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, முன்கள பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 4-வது கட்டமாக நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு உள்ளானவர் களுக்கும், 5-வது கட்டமாக பொது மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.

இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும், பிரச்சினைகளும் ஏற்படவில்லை. எனவே அனைவரும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன் ஆகியோர் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பின்னர் ஆட்சியர் கூறியதாவது:

மாவட்டத்தில் 3,800-க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டாலும் கூட அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சானிடைஸர் மற்றும் சோப்பு பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், துணை முதல்வர் குமரன், கரோனா தடுப்பூசி செலுத்தும் மைய பொறுப்பு அலுவலர் மாலையம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்