மதுரையில் விதிமீறும் ஷேர் ஆட்டோக்களால் மக்கள் அச்சம்

By என்.சன்னாசி

மதுரையில் எந்த விதிகளையும் பின்பற்றாமல் தாறுமாறாக ஓட்டப்படும் ஷேர் ஆட்டோக்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத் தடுக்க வேண்டிய காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மதுரை நகரில் வாகனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. ஐந்தாயிரத்துக்கும் அதிக மானவை ஷேர் ஆட்டோக்கள் என்ற பெயரில் இயங்குகின்றன. நினைத்த இடத்தில் நிறுத்தி ஏற்றி, இறக்குவதால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களில் செல்லப் பெரிதும் விரும்புகின்றனர்.

ஆனால் இந்த ஆட்டோக்களின் விதிமீறல்களுக்குப் பஞ்சமில்லை. நகர் பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் இந்த ஆட்டோக்களில் பயணிகளை ஏற்று வதிலும் போட்டா போட்டி நிலவுகிறது. ஷேர் ஆட்டோக்களில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருக்கையை விரிவுபடுத்தி 10 பேரை ஏற்றிச் செல்கின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை உட்பட முக்கிய சந்திப்புகள், பெரியார், மாட்டுத் தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு வெளியில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை கூவிக்கூவி அழைக்கின்றனர். தல்லாகுளம் சிஇஓ, பிஎஸ்என்எல் அலுவலகம் சந்திப்பு உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் நகர் பேருந்து உட்பட பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவு ஆக்கிரமிக்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இது தவிர அனைத்து சாலைகளிலும் ஷேர் ஆட்டோக்களுக்குப் பின்னால் பிற வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியவில்லை. திடீரென எங்கு நிறுத்துவர்கள் என்பதே தெரியாது. ஆட்டோ ஓட்டுநர்களின் விதிமீறல்களால் விபத்துக்களும் அதிகரித்துள்ளன. மேலும் ஷேர் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் மீது ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்குவது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன.

விதி மீறும் ஆட்டோக்கள் மீது காவல் துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், அவர்களை வேடிக்கை பார்க்கிறதோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே நகரில் விபத்துக்களை குறைக்கவும், புோக்குவரத்து நெரிசலைத் தீர்க்கவும் விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள் மீது மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாறன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மோகன் கூறியதாவது:

ஒரு காலத்தில் மதுரையில் அரை பாடி மணல் லாரிகளுக்குப் பயந்தோம். தற்போது ஷேர் ஆட்டோக்களுக்குப் பயப்படும் நிலை உள்ளது. ஷேர் ஆட்டோக்களால் மாநகரப் பேருந்துகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற புகார் உள்ளது. இருப்பினும் அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களை கண்டு கொள்ளவில்லை என்றால் பெரிய விளைவுகளை மதுரை மக்கள் சந்திக்க நேரிடும். நகரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீண்டும் வீடு திரும்புவது நிச்சமற்ற செயலாக மாறும். காவல், போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் மகேந்திரன் கூறும்போது, இரு சக்கர வாகனங்களின் விபத்துகளுக்கு ஷேர் ஆட்டோக்களே முக்கிய காரணம். இதன் ஓட்டுநர்கள் ஒழுக்கமற்ற முறையில் செயல்படுகின்றனர். பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் திடீரென பிரேக் போடுவதால் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில்லா தமிழகம் என அறிவித்தால் மட்டும் போதாது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா கூறியதாவது:

2019-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. 2019-ல் 185 வாகன விபத்துகளில் 183 பேரும், 2020-ல் 75 வாகன விபத்துகளில் 81 பேரும் இறந்துள்ளனர். 2019-ல் 682 வாகன விபத்துகளில் 801 பேரும், 2020-ல் 455 வாகன விபத்துகளில் 487 பேரும் காயமடைந்துள்ளனர்.

நகரில் அடிக்கடி விபத்து நடக்கும் சாலைகளைக் கண்டறிந்து தடுப்புச் சுவர், தற்காலிக வேகத் தடைகள் ஏற்படுத்தியதால் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. விதி மீறும் ஷேர் ஆட்டோக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு சந்திப்பு, பேருந்து நிறுத்தங்களில் ஷேர் ஆட்டோக்களின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு விதி மீறும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தவறு செய்யும் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்