வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி நேற்று செங்கல்பட்டு ராட்டினக்கிணறு பகுதியில் இருந்து பாமகவினர், அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் ஜிஎஸ்டி சாலையில் பேரணியாக சென்றனர்.
அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்டச் செயலர்ராதாகிருஷ்ணன் உட்பட 10 பேர்கொண்ட குழுவினரை மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதித்தனர். இக்குழுவினர் ஆட்சியர் ஜான்லூயிஸை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில், மாநில துணை பொதுச் செயலர் வெங்கடேசன், கிழக்கு மாவட்டச் செயலர் ராம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றதை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம், செவிலிமேடு, காவலான் கேட் பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. பாமகவினர் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில்இருந்து ஊர்வலமாக வந்து காவலான்கேட் பகுதியில் முழக்கமிட்டனர். இப்போராட்டத்தின் முடிவில் பாமகமாநில துணைச்செயலர் பொன்.கங்காதரன், மாவட்டச் செயலர் உமாபதி,முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்பாள் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேதாஜி சாலையில் பாமகவினர் சார்பில் போராட்டம் நடந்தது. இதில், பாமக துணை பொதுச் செயலர்களான கே.என்.சேகர், பாலயோகி, பிரகாஷ், சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, பாமக மாநில துணை அமைப்புச் செயலர் வெங்கடேசன், மாநில இளைஞரணி துணை செயலர் தினேஷ் உள்ளிட்ட 1,500-க்கும்மேற்பட்டோர் கோரிக்கை முழக்கமிட்டனர். முக்கிய நிர்வாகிகள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்தினுள் அனுமதிக்கப்பட்டு, அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago