டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
டெல்லியில் 2 மாத காலத்தை கடந்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குடியரசு தின விழா டிராக்டர் பேரணி டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் நடத்தப்பட்டன.
வேளாண் விரோத சட்டங்களை தமிழக அரசு ஆதரித்த காரணத்தால், அதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டமே நடத்தக் கூடாது என்று, ஜனநாயக விரோத நடவடிக்கையில் முதல்வர் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல.
காவல் துறையை தூண்டிவிட்டு, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற டிராக்டர் பேரணி போராட்டங்களில் பங்கேற்ற விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைப்பது மனிதநேயமற்ற செயல்.
எனவே, டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். கைப்பற்றப்பட்ட டிராக்டர்களை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago