திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 120 கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி வரை பெய்த தொடர் மழை காரணமாக அறுவடை தருணத்தை எட்டிய 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
அதேநேரத்தில், 1.5 லட்சம் ஏக்கர் மேட்டுப்பாங்கான நிலப்பகுதிகளில் உள்ள நெல்வயல்களில் தண்ணீர் வடிந்துள்ளதால் அவற்றில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வயல்களில் அறுவடை செய்யப்படும் நெல், கொள்முதல் நிலையங்களுக்கு கடந்த ஒருவாரகாலமாக வரத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரப்படும் விவசாயிகளின் நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய ஏற்கனெவே 205 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, கூடுதலாக 120 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியர் வே.சாந்தா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து கோட்டூர் மேலப்பனையூரைச் சேர்ந்த விவசாயிகள் பன்னீர்செல்வம், குணசேகரன் மற்றும் விவசாயிகள் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 205 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கோட்டூர் ஒன்றியம் மேலப்பனையூர், திருவண்டுதுறை, தட்டாங்கோவில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவே இல்லை. ஆட்சியரின் இந்த உத்தரவால் இப்பகுதிகளில் நெல்கொள்முதல் நிலையங்கள் பரவலாக திறக்கப்படும் சூழல் உள்ளது. இதற்காக ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago