மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலி தாவின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து அடுத்து அமையவுள்ள புதிய ஆட்சிதான் முடிவு செய்யும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கந்தநேரி பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி இன்று (ஜன.30) நடைபெற உள்ளது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று பிற்பகல் ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் அறிவித்துள்ளார். இது போகிற காலத்தில் இப்படி ஏதாவது ஒன்றை செய்துவிட்டு போக வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால், நான்கு மாதத்துக்குப் பிறகு வரும் புதிய ஆட்சிதான் இதுகுறித்து முடிவு எடுக்கும்.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏன் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனை வரும் கோரிக்கை வைத்து நெடு நாட்கள் ஆகிவிட்டன. இதில், ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது ஆளுங்கட்சிதான். ஆனால், அவர்களுக்கு போதிய நேரமும் இல்லை, நினைப்பும் இல்லை. ஆளுங் கட்சியினர் சொன்னால் ஆளுநர் கேட்பாரா? என்றே எனக்கு தெரியவில்லை. இவர்களை, ஆளுநர் மதிப்பதாகவே தெரியவில்லை. இதனால்தான் ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுக்க பயப்படுகிறார்கள்.
ஆளுநருக்கு திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உள்ள ஆளுநர் இந்த பிரச்சினையில் விரைந்து முடிவு எடுத்தால் தமிழ் மக்களின் பாராட்டுக்கு உரியவராவார். இல்லாவிட்டால், தமிழ் மக்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago