பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் சிதம்பரம் ராஜா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழகஅரசு நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டது. மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வலியுறுத்தி நேற்றுடன் 47-வது நாளாக மாணவ, மாணவிகள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் நிர்மலா ஆகியோர் மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்எல்ஏ பாண்டியன், போராட்டத்தை கைவிட்டு வந்தால் வரும் 27-ம் தேதி சென்னையில் முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
இதற்கு மாணவர்கள், நாங்கள் அமைதியான முறையில் போராட்ட இடத்தில் அமர்ந்து இருப்போம். மாணவ பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் சென்னையில் அமைச்சரை சந்திப்பார்கள். பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை அறிவித்தால் நிரந்தரமாக போராட்டத்தை கைவிடுகிறோம் என்று தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில துணைத்தலைவர் புலிகேசி, மாவட்ட செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும்14 ஆயிரம் மருத்துவர்களும் ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago