கரோனா காலத்தில் உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் துணை முதல்வரிடம் கோரிக்கை மனு

By செய்திப்பிரிவு

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த டாஸ்மாக் விற்பனையாளர் குழுவின்சார்பில், கரோனா காலத்தில் உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்கள் நலன்குழு சார்பில்,தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சங்கத்தின் சிறப்புதலைவர் கு.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக அரசின் நிதிச்சுமையை தாங்கி பிடிப்பவர்களாக தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடைய மாத ஊதியம் ரூ.9,500, ரூ.10,600, ரூ.12,750 ஆக இருந்து வருகிறது. ஆகவே டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

கரோனா காலத்தில் உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து டாஸ்மாக் கடைகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துதர வேண்டும், கடைகளில் பணி வரையறை செய்து 8 மணி நேரமாகவும் வார விடுமுறையும் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பற்றாக்குறையாக உள்ள மேற்பார்வையாளர் பணிக்கு அதற்கேற்ற தகுதியுள்ள விற்பனையாளர்களை பணிமூப்பு அடிப்படையில் மேற்பார்வையாளர்கள், உதவி விற்பனையாளர்களை, விற்பனையாளர்களாகவும் பணியமர்த்த வேண்டும்.

அறிவிப்பு, விசாரணையின்றி அபராதம், தற்காலிக பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அட்டைப் பெட்டி, கடைவாடகை, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கான முழு தொகையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இசிஎஸ் வசதியை முழுமையாக செய்து தர வேண்டும்.

சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். மாதா மாதம் ஆய்வு என்ற பெயரில் கடையின் விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் மீது மட்டுமே ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதை கைவிடுதல் வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்