ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் 2,359 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
8-ம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளி, சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்கை, கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வில் கலந்து கொள்ள 536 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 497 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். 39 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 1 மணியளவில் முடிவு பெற்றது. தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 14 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வுகள் நேற்று நடைபெற்றன.
இத்தேர்வில் கலந்து கொள்ள 1,463 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 1,362 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். 101 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில்,திருப்பத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி, திருப்பத்தூர் மீனாட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி என 5 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 541 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 500 பேர் மட்டுமே நேற்று நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டனர். 41 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் குணசேகரன் (வேலூர்), மதன்குமார் (ராணிப்பேட்டை), மார்ஸ் (திருப்பத்தூர்) மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago