மத்திய அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டு மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பிரதாப் ராவ் ஜாதவ் தலைமையில் 18 எம்பிக்கள் அடங்கிய குழுவினர் அண்மையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் திருப்போரூர் ஒன்றியம் மேலையூர் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை மற்றும் வீடு கட்டும் திட்டத்தில் தவறான தகவல்களை அதிகாரிகள் அளித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த எம்பிக்கள் குழு, இதுகுறித்து செங்கல் பட்டு ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில் அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனக் குறைவுடன் செயல்பட்டதாகக் கூறி திருப்போரூர் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மணிவண்ணன், சிறுங்குன்றம் ஊராட்சிச் செயலர் (பொறுப்பு) ஏழுமலை ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் கூறியதாவது: ஆய்வின்போது ஓர் ஆண்டில் நடைபெற்ற பணிகளை அறிக்கையாக தரும்படியும், அந்த பணிகளை எம்பிக்கள் குழு பார்வையிட வேண்டும் எனவும் உயர்அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன்அடிப்படையிலேயே அலுவலர்கள் செயல்பட்டுள் ளனர். மேலும் அவர்கள் 3 பேரும் சில மாதங்கள் முன்புதான் இங்கு பொறுப்பேற்றுள்ளனர். அதிலும் ஊராட்சி செயலர் கூடுதல் பொறுப்பாகத்தான் இந்த கிராமத்தை கவனித்து வருகிறார். உயர் அதிகாரிகள் முறையாக ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படியே அலுவலர்கள் நடந்துள்ளனர்.
ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் குழுவினர் கேள்வி கேட்டபோது சரியான தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை ஊரக வளர்ச்சித் துறை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்தப் பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago