விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் 40 குழுக்களாக ஈடுபட்டு வருகின்றன.
ராஜபாளையம் முதல் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மல்லபுரம் வனப்பகுதி வரை சாம்பல் நிற அணில் சரணாலயம் உள்ளது. இங்கு யானை, மான், மிளா, வரையாறு, சருகு மான், காட்டு மாடு, சிங்கவால் குரங்கு, காட்டெருமை, சிறுத்தை, செந்நாய் உட்பட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்த ஆண்டுக்கான வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முன்னதாக வில்லிபுத்தூர் வன விரிவாக்க அலுவலகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது வன விலங்குகளை கணக்கெடுக்கும் வழிமுறைகள், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், விலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், மரத்தில் உள்ள சுரண்டல்கள் மூலம் அது எந்த வகையான விலங்கு என்பதைக் கண்டறியும் முறைகள், ஒலி மற்றும் பார்த்து அறிதல் போன்ற பல்வேறு வழிமுறைகளில் வன விலங்குகளைக் கணக்கெடுப்பது குறித்து விளக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் பகுதி முதல் பேரையூர் அருகே உள்ள மல்லபுரம் வரை சுமார் 480 சதுர கி.மீ. தூரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அய்யனார் கோயில் பீட், அம்மன் கோயில் பீட் உட்பட பல்வேறு பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நேற்று தொடங்கியது.
இப்பணிக்காக 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வனத் துறை ஊழியர்கள் 2 பேரும், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 2 பேரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வனப்பகுதியில் 2 நாள் தங்கியிருந்து வன விலங்குகளைக் கணக்கெடுப்பர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago