காவிரி பாலத்தையொட்டிய சாலை மையத்தடுப்பை அகற்றி காவிரிக்கரை- சஞ்சீவி நகர் அணுகுசாலைகள் இணைக்கப் பட்டுள்ளன. இதன் வழியாக கார், வேன், ஆட்டோ, இருசக் கர வாகனங்கள் செல்ல அனுமதி யளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து காவிரிக்கரை வழியாக செல்லும் வாகனங்கள், காவிரி பாலத்தின் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சஞ்சீவி நகர் நோக்கி செல்ல போதிய இணைப்பு வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் வழியாக கொண்டையம்பேட்டை சென்று, அதன்பின்னர் சஞ்சீவி நகருக்கு வர வேண்டிய நிலை இருந்தது. சுமார் 5 கி.மீ தூரத்துக்கு மேல் தேவையின்றி சுற்றிச் செல்ல வேண்டியதை தவிர்ப்பதற்காக பல வாகன ஓட்டிகள், ஓயாமரி அருகிலேயே எதிர் திசை சாலைக்குச் சென்று, அங்கிருந்து சஞ்சீவி நகர் சந்திப்பு வரை சென்றனர். இதனால் அங்கு அடிக் கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதைத்தவிர்க்க காவிரிக்கரை சாலையுடன் சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தி லுள்ள தீவு போன்ற மையத்தடுப்பை அகற்றி, சஞ்சீவி நகர் அணுகு சாலையுடன் இணைக்க வேண் டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிலும் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது.
இந்நிலையில் சாலை பாது காப்பு மாதம் கடைபிடிக்கப்படு வதையொட்டி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆணையர் விக்னேஸ்வரன், ஆய்வாளர் நாவுக்கரசர், மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திக், சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினர் சேகரன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது விபத்து மற்றும் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்க அந்த இடத்திலுள்ள தீவு போன்ற மையத்தடுப்பை அகற்றி, அதன் வழியாக போக்குவரத்துக்கு அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களும், காவல்துறையினரும் இணைந்து பொக்லைன் மூலம் நேற்று அந்த மையத் தடுப்பை அகற்றி காவிரிக்கரை - சஞ்சீவி நகர் அணுகு சாலைகளை இணைத்தனர். மேலும் சோதனை அடிப்படையில் இச்சாலையின் வழியாக போக்குவரத்துக்கும் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘காவிரிக்கரை சாலையில் வருவோர் இனி நேராக காவிரி பாலம் வரை சென்று, அந்த இடத்தில் வலதுபுறமாக திரும்பி சஞ்சீவி நகருக்குச் செல்லலாம். இதற்காக இந்த அணுகுசாலையை தற்காலிகமாக இருவழிச்சாலையாக மாற்றியுள் ளோம். சாலை இணையும் இடம், வேகத்தடை உள்ள இடம் மற்றும் அங்குள்ள சிறிய பாலம் ஆகிய இடங்களில் இரும்பால் ஆன மையத்தடுப்புகள் வைக்க உள்ளோம். கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டும் இச்சாலையில் அனுமதிக்கப்படும். லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வழக்கம்போல காவிரி பாலம் வழியாக கொண்டையம்பேட்டை சென்று, அதன்பின் சஞ்சீவிநகருக்கு வர வேண்டும். அதேபோல காவிரிக்கரை சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே எதிர் திசைக்கு செல்ல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்த மையத்தடுப்பு தற்காலிகமாக அடைக்கப்படும். இவ்வழியாக எந்த வாகனங்களும் செல்ல அனு மதிக்கப்படமாட்டாது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago