மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து இந்திய மஜ்லிஸ் இதிகாதுல் முஸ்லிம் (ஏஐஎம் ஐஎம்) கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் அப்துல் மஜீத் தலைமை வகித்தார். மாநில தலைமை நிலையச் செயலாளர் முஜிபூர் ரஹிமான் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா வரவேற்றார்.
மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அஹமது சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “சென்னையில் விரைவில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வரும் தேசியத் தலைவர் அசாசுதீன் ஒவைசியின் கருத்துக்களை கேட்க மண்டலத்தில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
மேலும் கூட்டத்தில், “காட்டுப் பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கரும்பு விவசாயி களுக்கு தரணி சர்க்கரை ஆலை கொடுக்க வேண்டிய ரூ.27 கோடியை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங் களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago