தாமிரபரணி வெள்ளத்தால் சேதமடைந்த 30 நீர் உறிஞ்சும் கிணறுகளில் சீரமைப்பு பணி நிறைவு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த 48 நீர் உறிஞ்சும் கிணறுகளில் 30 கிணறுகளில் சீரமைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாமிரபரணியில் சமீபத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகராட்சிக்கு நீர் ஆதாரமாக திகழும் 15 தலைமை நீரேற்றும் நிலையங்களின் கீழ் உள்ள 48 நீர் உறிஞ்சும் கிணறுகள் மற்றும் மின்மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதாகின. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. மாற்று ஏற்பாடாக, மாநகராட்சியின் சார்பில் லாரிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து வருகிறது. இதை தொடர்ந்து மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும்உதவிப் பொறியாளர்கள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்த மொத்தமுள்ள 48 நீர் உறிஞ்சும் கிணறுகளில் இதுவரை தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தின் கீழ் உள்ள 6 நீர்உறிஞ்சும் கிணறுகளில், 3 -ல்பணிகள் முடிக்கப்பட்டு, குடிநீர்விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள, 3 நீர் உறிஞ்சும் கிணறுகள் ஆழமான பகுதியில் அமைந்துள்ளதாலும், வெள்ளத்தின் அளவு குறையாததாலும் படிப்படியாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.

குறுக்குத்துறை தலைமை நீரேற்றும் நிலையம், தீப்பாச்சி அம்மன் கோயில் அருகில் உள்ளநீர் உறிஞ்சும் கிணறு, கொண்டாநகரம் நீர் உறிஞ்சும் கிணறு,பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட ஒரு நீர் உறிஞ்சும் கிணற்றிலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 48 நீர் உறிஞ்சும் கிணறுகளில் இதுவரை 30 கிணறுகளுக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 நீர் உறிஞ்சும் கிணறுகளுக்கான சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படிப்படியாக நீர் வரத்து குறைவதன் அடிப்படையில் பணிகளை முடித்து முழுமையாக குடிநீர்விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்