நாட்டு மாடுகளை காக்கும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை காங்கயம் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உறுதி

By செய்திப்பிரிவு

நாட்டு மாடுகளை காக்கும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேருந்து நிலையத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் அவர் பேசியதாவது:

விளைநிலங்களில் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பங்களை வைக்கக்கூடாது என்பதை சட்டமாக கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறோம். மாட்டு இன ஆராய்ச்சியில் இருப்பவர்கள், நம் பூர்வீக மாடுகளை அரவணைத்து, ஆதரித்து காக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் செய்யும். நாட்டு மாடுகளை காக்கும் விவசாயிகளுக்கு தனி ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்திருக்கிறோம். மூன்று வேளை உணவு சாப்பிடுவோர், விவசாயத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விவசாயம், நெசவு, கால்நடை போன்ற தொழில் மேலும் விருத்தியடைய, திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும் என்ற திட்டமும் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பவர்கள், நேர்மையின் பக்கம் நிற்க வேண்டும்" என்றார்.

பூஞ்சானம் பிடித்த கரும்பு விநியோகம்

தாராபுரத்தில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, "பிரச்சார நிகழ்ச்சிகளில் கூடி நிற்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது, மக்கள் நீதி மய்யத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இது ஒரு மாற்றத்துக்கான கூட்டம் என்றே கூற வேண்டும். இது சரித்திரம் அளித்துள்ள ஓர் அரிய வாய்ப்பு. தாராபுரம் பகுதியில் காற்றாலை தொழில் ஊக்குவிக்கப்படும். அனைவருக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்படும். தாராபுரத்தில் விளைந்த செங்கரும்பை கொள்முதல் செய்யாமல், பூஞ்சானம் பிடித்த நோஞ்சான் கரும்புகள் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடையில் விநியோகிக்கப்படுகிறது" என்றார்.

உடுமலை, மடத்துக்குளத்தில்...

இதைத்தொடர்ந்து உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் அவர் பேசும்போது, சாதி பார்க்காமல் சாதிப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள். மடத்துக்குளம் பகுதி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட வேண்டும். கரும்பு உற்பத்தி அதிக அளவில் இருப்பதால், வெல்லம் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மடத்துக்குளத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். மேலும், மக்களின் தேவை என்ன என்பதை தெரிந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளது. உடுமலையில் 7 குளங்கள் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது. வேலை தேடும் தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றும் திட்டம் உள்ளது. பெண்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தை கொண்டுவரலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்