மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் காவல்துறையைபோல வார விடுமுறை அளிக்க வேண்டும் வனத்துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தேசிய வனக் கொள்கைப்படி, 33 சதவீதம் காடு இருக்க வேண்டும். தமிழகத்தில் 17 சதவீத காடும், பட்டா நிலங்களில் 4 சதவீத காடும்உள்ளது. வனத் துறையின் பாதுகாப்பு பணியில் வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் உள்ளனர். காடுகளை பாதுகாப்பதும், மேலாண்மை செய்வதும் இவர்களின் பணி. தற்போது வனக் காப்பாளர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மற்றும் வனக்காவலர்கள் என பலரும் மன உளைச்சலோடு பணிபுரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

8 மணி நேரம் வேலை

இதுதொடர்பாக வனத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கூறியதாவது: காவல்துறையில் உள்ளதுபோல, வனத்துறையிலும் வார விடுமுறை அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சுமார் 2400வனக் காப்பாளர்கள், 1350 வனக் காவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். 8 ஆண்டு வனக் காப்பாளராக பணிபுரிந்தவர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும். காவல்துறையின் தலைமைக் காவலருக்கு உள்ள சம்பளம் மற்றும்இதரப்படிகளை வனக் காப்பாளர்களுக்கும் வழங்க வேண்டும். ரிஸ்க்அலவன்ஸ் தற்போது ரூ.800 வழங்கப்படுகிறது. காவல்துறையின் அதிரடிப்படைக்கு வழங்குவதைப்போல ஒருவருக்கு ரூ.8000 வழங்க வேண்டும். அதற்கு காரணம், அதிரடிப்படையை வழிநடத்துபவர்களே வனத்துறையினர்தான்.

பெண்களுக்கு முன்னுரிமை

சொந்த மாவட்டங்களில் பணிபுரிய பெண் வனக்காப்பாளர்கள், காவலர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியை, தனி ஆட்களைக் கொண்டு தேசிய புலிகள் வாரியம் நடத்த வேண்டும். வனத்துக்கு உள்ளும், வெளியும் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் வனவிலங்குகளுக்கு பொறுப்பாக, வனக்காப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதை தவிர்த்து, உரிய காரணங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனச்சீருடை பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பணியின்போது இறக்கும் வனக்காப்பாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம்

தற்காலிக பணியிலுள்ள வேட்டைத்தடுப்புக் காவலர்கள் இறக்க நேர்ந்தால், அனைத்து சலுகைகள் மற்றும் இழப்பீடு ரூ.25லட்சம் வழங்க வேண்டும். வேட்டைத் தடுப்புக் காவலர் பணியில் 10 ஆண்டு முடித்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கல்வித்தகுதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மாவட்டத்துக்குள் சென்றுவர வனத்துறை ஊழியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வன முகாம்கள், சுற்றுலா முகாம்கள் மற்றும் தணிக்கைகளுக்கு உயர் அலுவலர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்