ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு பெரியமாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொடிவேரி தடுப்பணை, பவானிசாகர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நேற்று காலை முதலே, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவியும், வேலில் எலுமிச்சை கனி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி, நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். இதே போல், ஈரோடு பெரியமாரியம்மன் கோயில், கோட்டை கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர் -வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாயிபாபா கோயில்
ஈரோடு கருங்கல்பாளையம் விஸ்வரூப சீரடி சாய்பாபா கோயிலில் பக்தர்கள் வழங்கிய 100 கிலோ நெய்யினைக் கொண்டு உற்ஸவர் பாபாவுக்கு சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டனர். அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் ரயில்வே காலனி விநாயகர் கோயிலில் சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நள்ளிரவு பிரார்த்தனை
புத்தாண்டையொட்டி ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயம் வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இந்த வழிபாடுகளின் போது சாலையில் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. சமூக இடைவெளியைப் பின்பற்றி கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கொடிவேரியில் தடை
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கொடிவேரி தடுப்பணையில் நேற்றும், இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு இருந்ததால், அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. அறிவிப்பு தெரியாமல் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகளை போலீஸார் திருப்பி அனுப்பினர். அதேபோல், பவானிசாகர் அணைப்பூங்காவிற்கும் நேற்றும், இன்றும் தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதியும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாது என போலீஸார் அறிவித்து இருந்ததால், ஈரோடு நகரில் இரவில் கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
நாமக்கல்லில் வழிபாடு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல், நாமக்கல் நரசிம்மர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில், குமாரபாளையம் காளியம்மன் கோயில், சவுந்திரராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago