புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். இதுபோல் டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில், கரியமாணிக்க பெருமாள் கோயில், லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ் சாலைக்குமரன் கோயில், வண்ணார்பேட்டை பேராத்து செல்லி அம்மன் கோயில், குட்டத்துறை சுப்பிரமணியர் கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், பேட்டை பால்வண்ணநாதர் கோயில், முத்தாரம்மன் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவிலும், காலையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி பங்கேற்று பிரார்த்தனை செய்தார். இதுபோல் சீவலப்பேரி சாலையிலுள்ள அந்தோனியார் ஆலயம், கல்வெட்டான்குழி அந்தோனியார் திருத்தலம், சாந்திநகர் குழந்தை ஏசு ஆலயம், திசையன்விளை ஏசு ஆலயம், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தலம், வள்ளியூர் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவில் நன்றி வழிபாடும், அதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரையும் நடைபெற்றன.
நாகர்கோவில்
நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள ரோமன்கத்தோலிக்க, சிஎஸ்ஐ ஆலயங்கள், பெந்தேகோஸ்தே சபை,கிறிஸ்தவ ஜெபக் கூடங்களில் புத்தாண்டு நற்செய்தி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருமலை தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள், வேளிமலை குமாரசுவாமி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு திருப்பலிக்கு பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.இதேபோல், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் உட்படபல்வேறு கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சின்னக்கோயில் எனப்படும் திருஇருதய பேராலயத்தில் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. அதுபோல தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் நள்ளிரவு நடைபெற்ற திருப்பலி யில் திரளானோர் கலந்து கொண்டனர்.மேலும், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா தேவாலயம், தூத்துக்குடி தூய அந்தோனியார் ஆலயம், யூதா ததேயு ஆலயம், மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேளாங்கண்ணி மாதா தேவாலயம், வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயம், ஆலந்தலை, அமலிநகர், மணப்பாடு போன்ற இடங்களில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
நாசரேத் தூய யோவான் தேவாலயத்தில் பேராயர் தேவசகாயம் தலைமையில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு ஆராதனையில் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் தொடர்ந்து மற்ற பூஜைகளும் நடைபெற்றன. நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அதிகாலை 3.30 மணி முதல் பக்தர்கள் கோயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், பால விநாயகர் கோயில், புன்னையடி வனத்திருப்பதி கோயில், ஆறுமுகநேரி சோம சுந்தரி அம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.
கோவில்பட்டி
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை அலாசியல் துரைராஜ், உதவி பங்குத்தந்தை ஜேக்கப் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ் தலைமையில் புத்தாண்டு பிறப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. உதவி பங்குத்தந்தை ச.லூர்து மரிய சுதன் மறையுரை வழங்கினார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி கோயில், கோவில்பட்டி புற்றுக்கோயிலான சங்கரேஸ்வரி அம்மன் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் ஆகியவற்றில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago