புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க, சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் 2 நாட்களுக்கு மூடப்படுகின்றன.
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கரோனா தொற்று காரணமாக அங்கிருந்து இந்தியா வந்தவர்கள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், மீண்டும் கரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன் கூறும்போது, “சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட ஏற்காடு சுற்றுலா தலங்கள் நேற்று (31-ம் தேதி) மாலை முதல் நாளை (2-ம் தேதி) மாலை வரை மூடப்படுகின்றன. இங்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்” என்றார்.
மாவட்ட வன அலுவலர் முருகன் கூறும்போது, “வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஏற்காடு மான் பூங்கா, ஆனைவாரி முட்டல் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் 2-ம் தேதி வரை மூடப்படும்’ என்றார்.
இதேபோல, மேட்டூர் அணை பூங்காவும் நேற்று (31-ம் தேதி) மாலை முதல் 2-ம் தேதி வரை மூடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொடிவேரியில் தடை
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கொடிவேரி தடுப்பணைக்கு செல்ல இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டு இருந்த கொடிவேரி தடுப்பணையில் குளிக்க கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்று கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரிக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இன்றும், நாளையும் (1, 2-ம் தேதி) கொடிவேரி அணைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தபின்னர், வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago