திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சாலை விபத்துகளில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் குறைவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி தனி மாவட்டமாக உதயமானது. கிட்டத்தட்ட ஓராண்டு முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் குறைவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம்ஆண்டில் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) 17,474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 220 வழக்குகள் திருட்டு வழக்குகளாகும். இதில், 60 சதவீதம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொடர்பான வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாராயம், கஞ்சா, குட்கா, போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 51 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும், சிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த 75 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 114 சாலை விபத்துகளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பலனாக 2020-ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 100 சாலை விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும். வரும் ஆண்டுகளில் விபத்துகளை மேலும் குறைக்க காவல் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, விபத்துகள் அதிகம் நிகழும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் தடுப்புகளை அமைத்து அங்கு காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத் தவும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் ‘பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள்’பொருத்தவும் உத்தேசிக்கப் பட்டுள்ளது.
காவல் துறையினர் எவ்வளவு தான் முயற்சிகளை எடுத்து வந்தாலும், வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது. வரும் ஆண்டில் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago