கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளர்த்த 3 பண்ணைகள் அழிப்பு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்ட 3 பண்ணைகளை கண்டறிந்து மீன்வளத்துறை அதிகாரிகள் அழித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள ஓசூர், சூளகிரி, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி ரக மீன்கள் வளர்க்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து நேற்று ஓசூர் பகுதியில் மீன் வளத்துறை உதவி இயக்குநர் ரத்தினம் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், முத்தாலி பகுதியில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்ட 3 பண்ணைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். குட்டையில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய அதிகாரிகள், பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். இதனால் மீன்கள் மெதுவாக உயிரிழக்கும் எனவும், இறந்த மீன்கள் குழி தோண்டி புதைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இம்மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இம்மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மற்ற மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. அத்துடன் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழக்கூடியவை. இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால், அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

மேலும், இம்மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இந்த வகை மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்புள்ளது. ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர, வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.

எனவே, இந்த வகை மீன்களை வளர்க்க வேண்டாம். ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்கும் பண்ணைகள் கண்டறியப்பட்டால் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், கதவு எண். 24,25, 4-வது கிராஸ், கோ-ஆப்ரேட்டிவ் காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-235745 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தடையை மீறி ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்