சேவூர் அருகே குப்பைக்கிடங்கில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. நேற்று பிற்பகல் அங்கு 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தலை, உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடப்பதாக, சேவூர் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும் சிறுமியின் படங்கள் மற்றும் மீட்கப்பட்ட விவரங்களை, வாட்ஸ்-அப் மூலமாக பொதுமக்கள் பகிர்ந்ததால், அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சேவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "மீட்கப்பட்ட சிறுமிக்கு கடுமையான காயங்கள் உள்ளன. வசதியான வீட்டு குழந்தைபோல ஆடைகள், காலணி அணிந்துள்ளார். அவரை யாரேனும் கடத்திவந்தனரா, வேறு காரணங்கள் உள்ளதா என்பது தெரியவில்லை. முதற்கட்டமாக குப்பைக் கிடங்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில், கண்ணாடி மற்றும் முகக்கவசம்அணிந்த பெண் ஒருவர் குறிப்பிட்டநேரத்தில் அப்பகுதியில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணை இருவர் காரில் ஏற்றிச் சென்றதாகவும், மக்களில் சிலர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் யார், சிறுமி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்களை சேகரிக்க பிற காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிறுமி தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago