வனத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள லண்டானா உள்ளிட்ட உண்ணிச்செடிகளை அகற்றி, அவற்றில் பர்னிச்சர் செய்து முதுமலையில் வசிக்கும் பழங்குடியினர் விற்பனை செய்கின்றனர். இதனால் வனச்செழிப்பை பாதுகாப்பதோடு, வருமானத்தையும் பெருக்கி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குறும்பர்,காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் வசிக்கும் பனியர், இருளர், குறும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள்விவசாய கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். தினசரி கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் வசிக்கும் பெட்ட குறும்பரின மக்களில் சிலர், வனத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள களைச்செடிகளை அகற்றி, அவற்றில் பயனுள்ள பர்னிச்சர்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
சந்தைப்படுத்துவதில் சிக்கல்
இதுகுறித்து தெப்பக்காட்டில் உள்ள குறும்பாடி கிராமத்தை சேர்ந்த மாறன் என்ற இளைஞர் கூறும்போது, ‘‘எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த லண்டானா என்ற களைச்செடியின் உண்ணிக்குச்சிகளைக் கொண்டு பர்னிச்சர்களை உருவாக்க வனத் துறை உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, உண்ணிக்குச்சிகளில் சோபா செட், இருக்கைகள், ஊஞ்சல், டிரசிங் டெபிள் ஆகியவற்றை செய்து வருகிறேன். உண்ணிக்குச்சிகளை வேக வைத்து, பட்டையை உரித்து, குச்சிகளை பதப்படுத்தி பர்னிச்சர் செய்து, வார்னிஷ் அடித்து விற்பனை செய்கிறோம்.
எங்கள் பொருட்களை சந்தைப் படுத்துவதில் சிக்கல் உள்ளது.
வனத் துறை மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தினர், எங்கள் படைப்புகளை சந்தைப்படுத்த உதவுவதாக உறுதியளித்துள்ளனர்’’ என்றார்.
விலை குறைவு
வனத்துறையினர் கூறும்போது, ‘‘பழங்குடியினர் தயாரிக்கும் பர்னிச்சர்கள், கடைகளில் கிடைப்பதை விட தரமானதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கின்றன. இதை பொதுமக்கள் வாங்கினால், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்’’என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago