ஈரோடு நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், மூன்று இடங்களில் அடையாள சின்னத்துடன் கூடிய புதிய ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் மூன்று சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், மேம்பாலத்தின் கீழ் ஐந்து சாலைகள் சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் தற்காலிக ரவுண்டானா அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் புதிய ரவுண்டானா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈவிஎன் சாலை, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை, நசியனூர் சாலையை இணைக்கும் வகையில், புதிய ரவுண்டானா அடையாள சின்னத்துடன் அமைக்கப்படும். இதேபோல், பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மீனாட்சி சுந்தரனார் வீதி, காந்திஜி சாலை, மணிக்கூண்டு சாலை, திருவேங்கடசாமி வீதி, கச்சேரி வீதியை இணைக்கும் வகையில், ஒரு ரவுண்டானா அமைக்கப்படும்.
காளைமாடு சிலை சந்திப்பில் ஏற்கெனவே உள்ள ரவுண்டானா நவீனப்படுத்தப்படும். இப்பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், சூரம்பட்டி நான்குசாலை சந்திப்பில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago