கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டதால், கிலோவிற்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி பயிரான நிலக்கடலை 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையைப் பொறுத்து 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. மழையை மட்டுமே நம்பி, ஜூன் மாதங்களில் நிலக்கடலை விதைக்கப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பொழியும் பருவமழையினைக் கொண்டு நிலக்கடலை செடிகள் அறுவடைக்கு தயாராகும். நிகழாண்டில் பருவநிலை மாற்றம், தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, நிலக்கடலை கிலோவிற்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவேரிப் பட்டணம் ஜெகதாப் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் கூறும்போது, நிகழாண்டில் நிலக்கடலை காய், காய்க்கும் தருணத்தில் மழையின்றி காய்ந்தன.
இதனைத் தொடர்ந்து பெய்த மழையால் செடிகள் நன்றாக வளர்ந்தன. ஆனால் செடியில் காய்கள் குறைந்த அளவே இருந்தது. ஏக்கருக்கு 10 மூட்டை நிலக்கடலை கிடைக்க வேண்டியது. ஆனால் மழையால் 2 மூட்டை மட்டுமே அறுவடை ஆனது. 80 சதவீதம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய வருவாய் கிடைக் கவில்லை, என்றார்.
நிலக்கடலை வியாபாரிகள் கூறும்போது, நிலக்கடலை மூட்டைகள், மதுரை, தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். 60 கிலோ கொண்ட நிலக்கடலை ஒரு மூட்டையாக விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். நிகழாண்டில் விளைச்சல் பாதிப்பால் நிலக்கடலை வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த மாதம் நிலக்கடலை கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. தற்போது கிலோ ரூ.55-க்கு விற்பனையாகிறது. இதனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மரச்செக்கு எண்ணெய், செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படும் கடலை புண்ணாக்கு உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago