தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் இன்னும் பேசவில்லை கிருஷ்ணகிரியில் பாமக தலைவர் ஜி.கே.மணி தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் இன்னும் பேசவில்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாமக, வன்னியர் சங்கம் சார்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில தொகுப்பு இட ஒதுக்கீடு முறை உள்ளது. தமிழகத்தில் இல்லை. இந்நிலையில், தமிழக அரசு ஆணையம் அமைத்து, அதற்கான தலைவராக நீதிபதியை நியமித்து, கணக்கெடுப்பு நடத்த 6 மாதம் கால அவகாசம் எனக் கூறியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ள கமிஷன்கள் கூறிய அறிக்கையின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசை வற்புறுத்தி வருகிறோம்.

தேர்தலுக்கான கூட்டணி குறித்து, மற்ற கட்சிகளுடன் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. எங்கள் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை அறிந்து கொண்டு, தேர்தலுக்கான தேதி அறிவித்தபின், கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி குறித்து அறிவிப்பார். அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்.

போராட்டம் என்பது வேறு. கூட்டணி என்பது வேறு. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாநில துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் நிர்வாகிகள் மேகநாதன், சுப.குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்