சொரக்குடியில் ஜன.7-ல் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

திருவாரூர் அருகே உள்ள சொரக்குடியில் தமிழக அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இடத்தை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ஆட்சியர் வே.சாந்தா, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் நான் உட்பட 6 அமைச்சர்களும் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்க உள்ளோம்.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில், உயர் கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் குறித்து அரங்குகள் அமைத்து, வழிகாட்ட உள்ளனர்.

இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து பங்கேற்கலாம். https://thiruvarur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், தங்களது சுய விவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்