திருப்பத்தூர் அருகே பள்ளிச்சந்தம் வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே கி.பி 751-ம் ஆண்டைச் சேர்ந்த ‘பள்ளிச்சந்தம் வட்டெழுத்துக் கல்வெட்டு’ கண்டெடுக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர், ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டம் குண்டு ரெட்டியூர் மலைச்சரிவில் கள ஆய்வு நடத்தியபோது, கி.பி.751-ம் ஆண்டு பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து உதவி பேராசிரியர் ஆ.பிரபு கூறும் போது, "கடந்த 2016-ம் ஆண்டு முதல் திருப்பத்தூர் அடுத்த குண்டு ரெட்டியூரில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரலாற்று தடயங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளோம். குண்டு ரெட்டியூரில் கற் காலம் முதல் சங்ககாலம், பல்லவர் காலம் வரை பல வரலாற்று தடயங்கள் கண்டறியப்பட் டுள்ளன.

இதில், ஆயுதங்கள், கருப்பு-சிவப்பு மண்பாண்ட ஓடுகள், சுடுமண் ஊது குழாய்கள், கல்மணிகள், உடைந்த வளையல்கள் உள் ளிட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு தூய நெஞ்சக்கல்லூரி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், குண்டு ரெட்டியூரில் முறையாக அகழாய்வு நடத்தவும் அரசுக்கு ஆய்வு அறிக்கை அனுப்பி யுள்ளோம்.

இந்நிலையில், குண்டு ரெட்டி யூரில் சமீபத்தில் கள ஆய்வு நடத்தியபோது, மலைச் சரிவில் அடர்ந்த புதர்களுக்கு இடையே பாறைக்குன்றின் பக்கவாட்டில் ‘பள்ளிச்சந்தம் வட்டெழுத்து’ கல்வெட்டு ஒன்றை கண்டெடுத் தோம். இந்த கல்வெட்டை ஆய்வு செய்தபோது, தூய தமிழ் வட்டெழுத்துக்களால் பொறிக்கப் பட்டுள்ளது. புடைப்பு விளிம்புடன் கூடிய கட்டத்தில் 9 வரிகள் பொறிக் கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டானது, சமணப்பள்ளிகளுக் கென வழங்கப் பட்ட ‘பள்ளிச்சந்தம்’ என்பதை குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் விவரிக் கிறது. அக் காலத்தில் பள்ளிச்சந்தம் என்பது, பிரமதேயம், தேவதானம் போல சமண சமயத்தாருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையை குறிப் பதாகும்.

 புருஷவர்மன் என்ற மேலைக்கங்க மரபைச்சார்ந்த மன்னனின் 25-ம் ஆட்சிக் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட தாகும்.  புருஷவர்மன் மன்னன் தெற்கு கர்நாடகம் மற்றும் வட தமிழகத்தை ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.பி.726 முதல் கி.பி.788 வரையாகும். இக்கல்வெட்டு கி.பி 751-ல் பொறிக்கப்பட்டுள்ளது.

 புருஷவர்மனின் நடு கற்கள் தருமபுரி மாவட்டம், பாலவாடி மற்றும் இண்டூர் பகுதி களில் ஏற்கனவே கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை, அனைத் தும் கி.பி.736 மற்றும் 747 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவையாகும். குண்டு ரெட்டியூரில் நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுக் கப் பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த பள்ளிச்சந்தத்தை ‘மிறை அடக்கி யார்’ என்ற சிற்றரசனின் மகன் ‘கடு கட்டியார்’ வழங்கியுள்ளார். இவர்,  புருஷ வர்மனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளான ‘கோவூர்நாடு’ ‘எயின்நாடு’ ஆகியவற்றை ஆட்சி செய்தவர். கடுகட்டியார் வழங்கிய பள்ளிச்சந்தத்தின் 4 எல்லைகளை விளக்கி அந்நிலத்தின் விளைச்சல் பாதுகாக்கப்பட்டு சமணப் பள்ளிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதை இக்கல்வெட்டு விளக்குகிறது. இக்கல்வெட்டில் உள்ள வட்டெழுத்துக் கள் தூய தமிழ் நடையினை கையாண்டு எழுதப்பட்டுள்ளன. ‘ஸ்வஸ்தி’ என்ற சொல்லை ‘சுவத்திரிசிரி’ என்றும் புருஷவர்மன் என்பதை ‘புருசவிக்கிரமபருமர்’ என்றும் தமிழ் படுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளன. கங்க மன்னர்கள் சிறந்த சமணப்பற்றாளர்கள் என்பதற்கு இக்கல்வெட்டு சிறந்த சான்றாகும். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இக்கல்வெட்டானது சமய நல்லிணக் கத்தினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்று பெருமையினை எடுத்துரைக்கும் இக்கல் வெட்டினை முறையாக பாது காக்க தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்