பிரிட்டனில் வீரியமிக்க கரோனா வைரஸ் பரவல் எதிரொலி நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு திரும்பிய 27 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

பிரிட்டனில் இருந்து திருப்பூர்,நீலகிரி மாவட்டங்களுக்கு திரும்பிய27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் மரபியல்மாற்றம் கொண்ட வீரியமிக்க கரோனா வைரஸ் பரவிவருகிறது.இந்நிலையில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்தவர்கள் குறித்து சுகாதாரத் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

பிரிட்டனில் இருந்து 16 பேர்நீலகிரி வந்துள்ளனர். அவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு கரோனா பாதிப்புஇல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது. “தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுபவர்களிடம் அடுத்த 20 நாட்கள் பிறகு மீண்டும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் வரக் கூடிய விமானங்கள் பிரிட்டனில் இறங்கிய பின்னர், இங்கு வருகின்றன. இதனால், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 650 பேர்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, கரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணி விட வேண்டாம். அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்றார்.

திருப்பூர்

தொழில் மாவட்டமான திருப்பூரில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு சென்று வருவோரின் எண்ணிக்கை அதிகம். அதன்படி, கடந்த 9-ம் தேதியில் இருந்து தற்போது வரை பிரிட்டன் சென்று வந்தவர்களின் விவரங்களை, திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை சேகரித்து, வீடுகளில் அவர்களை தனிமைப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகரில் 4, குடிமங்கலம் 2, பல்லடம் 3, காங்கயம் 2 என பிரிட்டன் சென்று திருப்பூர் மாவட்டத்துக்கு வந்த 11 பேர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏற்கெனவே கரோனா பரிசோதனை (ஸ்வாப்) மேற்கொண்டதில், தொற்றும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது முறையாக மீண்டும் ஸ்வாப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், யாருக்கேனும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்