பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

அனைத்து பனியன் தொழிலாளர்சங்கங்கள் சார்பில், திருப்பூர்ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனி டம் அளிக்கப்பட்ட கடித விவரம்:

திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பனியன் தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலான பனியன் தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. நாளொன்றுக்கு 10 முதல் 20 மணி நேரம் வேலை வாங்குவதை தடுத்து நிறுத்தி, சட்டப்படியான 8 மணி நேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வாழ்க்கை நெருக்கடிகளை ஓரளவு சமாளிக்க 8 மணி நேர வேலைக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலம் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்த அமலாக்கத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓவர் டைம் வேலைக்கு சட்டப்படியான இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். பீஸ்ரேட் முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போனஸ், ஈட்டிய விடுப்பு, சம்பளம், பண்டிகை விடுமுறை சம்பளம் ஆகியவற்றை தவறாமல் கணக்கிட்டு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், ஒப்பந்தக்கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்து வேலை தேடி வந்திருக்கும் தொழிலாளர்களை முழுமையாக பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட புலம்பெயர்ந்த் தொழிலாளர்களுக்கான 1979-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வார விடுமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்