கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே ரூ.3 கோடி மதிப்பில் சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை அமைந்துள்ளது. மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலைக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் வந்து செல்வது வழக்கம்.
மலையில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோயில் அருகே அமைந்துள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் மக்கள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
கொல்லிமலையின் சிறப்பை போற்றும் வகையில் சூழல் பூங்கா அமைக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதன்பலனாக கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொல்லிமலையில் சூழல் பூங்கா அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட வனத்துறை வனவியல் விரிவாக்க அலுவலர் என்.சக்திவேல் கூறியதாவது:
கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கு வனவிலங்குகளின் புகைப்படங்கள், வனவிலங்குகளின் குணாதிசயம், நடவடிக்கைகள், உணவுப் பழக்கங்கள் , பறவைகள் குறித்த கருத்தியல் விரிவாக்க மையம், கொல்லிமலையில் கிடைக்கக் கூடிய விளைபொருட்களைக் கொண்ட உணவகம் அமைக்கப்பட உள்ளது.
குழந்தைகள் விளையாட்டு மைதானம், 30 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகைத் தோட்டம், அதன் பயன்பாடு, பழங்குடி மக்கள் தொடர்பான அருங்காட்சியகம், வியூபாய்ன்ட் மற்றும் கொல்லிமலையில் வாழ்ந்த 18 சித்தர்கள் தொடர்பான அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது சிறிய அளவில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு கட்டண அடிப்படையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் திண்டுக்கல் சிறுமலை மற்றும் கொல்லிமலையில் மட்டும் தான் சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொல்லிமலையில் சூழல் சுற்றுலா ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு எளிதில் செல்ல லிஃப்ட் வசதி ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. இதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago