பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தர்ணா வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம்

நெருப்பெரிச்சல் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை, பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் அடைப்படையில் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும், தர்ணா போராட்டத்திலும் பொதுமக்கள் நேற்று ஈடுபட்டனர்.

திருப்பூர் வாவிபாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மாவட்ட நிர்வாகம்சார்பில் கலால் மற்றும் ஆயத் தீர்வை துணை ஆணையர் தலைமையில், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் உட்பட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் முடிவில் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது எனவும், நவம்பர் 19-ம் தேதியுடன் மதுக்கடைமூடப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைப்படி மூடப்படாததால், மதுக்கடையை நிரந்தரமாக மூட உத்தரவிட வலியுறுத்தி, வீடுகளில் நேற்று கறுப்புக் கொடி ஏற்றி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, நெருப் பெரிச்சல் பேருந்து நிறுத்தம் பகுதியில் 80-க்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுப்பர்பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "சம்பந்தப்பட்ட மதுக்கடையை வேறு இடத்துக்கு அகற்ற வேண்டும் அல்லது நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்டங்களாக மதுக்கடையை முற்றுகையிடுதல், ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்