அம்மை நோயில் இருந்து கறவை மாடுகளை காக்க கால்நடை விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? கால்நடை மருத்துவ பேராசிரியர் விளக்கம்

கறவை மாடுகளில் தோல் அம்மை நோய் என்பது வைரஸ் நச்சுயிரியால் ஏற்படக்கூடிய தொற்றுநோய் ஆகும். தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது கறவை மாடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் கால்நடை மருத்துவ அறிவியல் உதவிப் பேராசிரியர் சித்ரா கூறும்போது, "இந்த நோயால் மாடுகளின் கறவை தொடங்கி சினைப் பிடிப்பு அனைத் தும் பாதிக்கப்படும். இளம் சினைமாடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.

வளர்ச்சி குறைபாடான கன்றுகளும் பிறக்கும். மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும், இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். அதிக ஈரப்பதம், வெப்பநிலைக் காலங்களில் அதிகமாக பரவும் இயல்புடைய இந்த வகை வைரஸ் நச்சுயிரி நோய், அனைத்து வயதுடைய கறவை மாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மாட்டுத்தொழுவத்தில் ஈ, கொசு,உண்ணி ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். மாடுகள் மற்றும் தொழுவத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, புதிதாக வாங்கி வரும் மாடுகளை தொழுவத்தில் உள்ள மாடுகளிடம் சேர்க்காமல் 30 நாட்கள் வரை தனியாக சுகாதாரமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும்.

வேப்பங்கொழுந்துடன், மஞ்சள் கிழங்கை சேர்த்து நன்றாக அரைத்து, கொப்பளங்கள் மற்றும் காயங்கள் மீது தினமும் இரண்டு வேளை தடவ வேண்டும். வேப்பெண்ணெய்யை உடல் முழுவதும் பூசிவிட வேண்டும். கொப்பரை தேங்காய், கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை 100 கிராம், வெந்தயம் 50 கிராம், மஞ்சள் கிழங்கு 25 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை அளிக்க வேண்டும். கொப்பளங்கள், காயங்களில் ரத்தக் கசிவு மற்றும் சீழ்பிடித்து காணப்பட்டால், கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்