ஓவேலியில் உள்ள செல்போன் கோபுரம் அடிக்கடி பழுதடைந்து விடுவதால், சிக்னல் இல்லாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட 8 பழங்குடியின கிராமங்கள் மற்றும் 57 குக் கிராமங்களில் சுமார் 22,000 மக்கள் வசித்துவருகின்றனர். ஓவேலியில் உள்ள சந்தனமலை என்ற இடத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூலம் கடந்த 2009-ம் ஆண்டு 2ஜி வசதியுடன் கூடிய செல்போன் கோபுரம் நிறுவப்பட்டது.
சூரிய ஒளியின் மூலம் இயங்கிவந்த இந்த கோபுரம் மூலம் 2017-ம் ஆண்டு முதல் 3ஜி சேவையும் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், 3ஜி சேவைக்கு தரம் உயர்த்தப்பட்ட பிறகு, கோபுரத்தை இயக்க கூடுதல் மின்சாரம் தேவைப்பட்டது. ஆனால், பிரிவு-17 ஜென்மம் நிலத்தில் கோபுரம் அமைந்திருந்ததால், மின்சார வசதி அளிக்க இயலாத சூழல் நிலவியது. தற்போது டீசல் ஜெனரேட்டரை கொண்டு இயங்கிவரும் இந்தகோபுரம் அடிக்கடி பழுதாவதால், தொலைத்தொடர்பு இணைப்பு கிடைக்காமல் ஓவேலி பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கரோனா காரணமாக ஆன்லைன்மூலம் கல்வி கற்கும் மாணவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தினால் பாடங்களை மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடி மாணவர்கள் செல்கின்றனர். வனப்பகுதிக்குள் மேடான பகுதிக்கு செல்வதால், வன விலங்குகள் தாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, ஓவேலி பகுதியில் செல்போன் சிக்னல் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய அதிகார குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஓவேலியில் உள்ள செல்போன் கோபுரம் 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வருவதால், அதற்கு மின்சார இணைப்பு வழங்க புதிதாக அனுமதி ஏதும் பெற தேவையில்லை என மத்திய அதிகார குழு தெரிவித்துள்ளது. இதனால், இந்த செல்போன் கோபுரத்துக்கு இம்மாத இறுதிக்குள் மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago