விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் கொள்கை முடிவை அரசு அறிவிக்கும் வரை அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ளக்கூடாது திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கொள்கை முடிவை அரசு அறிவிக்கும் வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தின் கீழ் அதிகாரிகள் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று, திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் (ஐடிபிஎல்) அமைக்கப்பட உள்ளது. இதனால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் பாதிக்கப்படும் விவசாயிகள் கூறி வருகின்றனர். இதற்காக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில், இவ்விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவை அறிவிக்கும் வரை, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அதிகாரிகள் மீறக்கூடாது என, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூட்ட மைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப் பிரகாஷ், ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, "ஐடிபிஎல் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவை அறிவிக்கும்வரை, எந்தவித பணிகளும் மேற்கொள்ளு வதில்லை என அரசு அதிகாரிகள், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தினர் மற்றும் விவசாயிகள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.

இதை மீறும் விதமாக, ஆங்காங்கு சில இடங்களில் திடீரென அதிகாரிகள் அளவீடு மற்றும் ஆவண விசாரணை பணிகளுக்கு செல்கின்றனர். இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. ஒப்பந்தத்தை மீறி நடப்பது அதிகாரிகளுக்கு அழகில்லை. எனவே, அரசு கொள்கை முடிவை அறிவிக்கும் வரை, ஒப்பந்தத்தை மீறி அதிகாரிகள் செயல்படக்கூடாது. அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்து, பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்