திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து உடுமலையில் நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு பணி ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 19, 20-ம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை, இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியாளர்களும் பங்கேற்கலாம். www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம் அல்லது முகாம் நடைபெறும் நாளில் நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொண்டு பணியில் சேர்கிறவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
முகாமின்போது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாக வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago