ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பாசன சபை அலுவலக வளாகத்தில் யு8பி கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சபைத் தலைவர் பி.ஆர்.ஏகாம்பரம் தலைமை வகித்தார்.பகிர்மான கமிட்டி தலைவர் கே.ஆர்.லோகநாதன், செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் :
கீழ்பவானி பாசன பகுதியில் நன்செய் பயிருக்கு விடப்படும் நீர் 12-ம் தேதியுடன் (இன்று) 120 நாட்கள் முடிவடைகிறது. நடவு காலங்களில் மழையின்மை காரணமாக, நடவுபணிகள் தாமதம் ஆனதால் நெற்பயிர் முதிர்ச்சி அடையாமல் உள்ளது. எனவே, கூடுதலாக 15 நாட்கள் நீர்திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் இரண்டாம் முறை பாசன நிலங்களுக்கு, புன்செய்பயிருக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீர் திறக்கப்படவுள்ளது. எனவே, யு8பி பாசன சபைக்குட்பட்ட கொப்புவாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
பாசன சபை பகுதிகளில் கொப்பு வாய்க்கால் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கொப்பு வாய்க்கால் கட்டுமானங்கள் சேதம் ஏற்பட்டு கடைமடை வரை நீர் செல்வதில்லை. இதனால், கடைமடைப் பாசனம் பாதிக்கப்படுகிறது. எனவே, வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆய்வு செய்து கொப்பு வாய்க்கால் சீரமைப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
குடிமராமத்து திட்டத்தில் கொப்பு வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு 50 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் நெல் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் பால்வளத் தந்தை குரியனின் 99-வது பிறந்ததினத்தையொட்டி, மாரப்பம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் (18,680 லிட்டர்) வழங்கிய முன்னோடி விவசாயி கோப்பன்காடு சி.கந்தசாமியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago