கோவில்பத்து உணவு தானிய சேமிப்பு கிடங்கை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஎன்சிஎஸ்சி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கோவில்பத்து உணவு தானிய சேமிப்பு கிடங்கை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஎன்சிஎஸ்சி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி தெரிவித்துள்ளது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 20 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் சேமிக்கப்படுகிறது. இவற்றை பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்த பெரிய அளவிலான கிடங்கு வசதிகள் இல்லாமல், பெரும்பாலான நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிலேயே இருப்பு வைக்கப்படுகின்றன.

இதனால், கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது இந்த கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் நெல் மூட்டைகள் வீணாகின்றன.

இதை கருத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களில் கொள் முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து பாதுகாக்கும் வகையில் நாகை மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 175 ஏக்கர் பரப்பளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டது. 25 கோடி கிலோ அளவில் விளைபொருட்களை சேமிக்கும் வசதியுடைய ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு கிடங்கு இது. திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் வழிகாட்டுதலின்படி, 3 தனியார் நிறுவனங்கள் கட்டு மானப்பணிகளை மேற் கொண்டன.

இதன் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டபோது, தரமற்ற முறையில் கட்டப்படுவதாகவும், கட்டுமானப்பணிக்கு உப்புநீர் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட ‘கஜா’ புயலின்போது, இந்த கிடங்கு முற்றிலும் உருக்குலைந்து சின்னாபின்னமானது.

தற்போது மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் அச் சுறுத்தி வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் விவ சாயிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து வீணாகி வருகின்றன.

எனவே, கோவில்பத்து கிராமத்தில் உள்ள மிகப்பெரிய அளவிலான சேமிப்பு கிடங்கை விரைவில் திறக்க தமிழக முதல்வர் மற்றும் உணவுத் துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்