வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது

By செய்திப்பிரிவு

வேலூர் சிறையில் உண்ணா விரதம் இருந்துவரும் முருகனுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் நேற்று 3 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப் பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளை மீறியதாக வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் பேசும் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தனது மனைவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறையில் முருகன் நேற்றுடன் 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

சிறை காவலர்களிடம் வாக்குவாதம்

இதற்கிடையில், முருகனின் அறையில் நேற்று முன்தினம் சோதனை நடத்த முயன்ற சிறை காவலர்களிடம் அவர் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர் பாக, பாகாயம் காவல் நிலை யத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், அவரைதனிமை சிறையில் அடைத்துள் ளனர்.

4-வது முறையாக குளுக்கோஸ்

தொடர்ந்து, உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல் நிலையை மருத்துவக் குழுவினர் நேற்று பரிசோதித்தனர். அப்போது, முருகனின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவில் வேறுபாடு இருந்ததால் 3 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. கடந்த 20 நாட்களில் முருகனுக்கு நேற்றுடன் நான்காவது முறையாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்